திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே, புதுப்பெண் ஒருவர், சினிமா பார்க்க அழைக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது.

காங்கயம் அருகே படியாண்டிபாளையத்தைச் சேர்ந்த ஜீவா என்றவர் சரக்கு ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவருக்கு, சவுமியா என்ற இளம்பெண்ணுடன் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சவுமியா, காங்கயத்தில் உள்ள ஒரு செருப்பு கடையில் பணியாற்றி வந்தார்.

சவுமியா, தனது கணவரை சினிமா பார்க்க அழைத்து செல்லும்படி கடந்த சில நாட்களாக வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், வேலை பளுவின் காரணமாக ஜீவா, இதற்கு சம்மதிக்காமல் வந்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சவுமியா,  தனது தாயிடம் செல்போனில் அழுதபடியே பேசினார். நேற்று காலை, ஜீவா வேலைக்காக தனது ஆட்டோவுடன் கிளம்பியபோது, சவுமியா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அவர் வீட்டில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் வீடு திரும்பிய ஜீவா, மனைவியை தூக்கில் தொங்கிய நிலையில் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தவரின் உதவியுடன், சவுமியாவை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.