சென்னை அண்ணாநகர் மேல் நடுவங்கரை பஜனை கோவில் தெருவை சேர்ந்த காளிதாஸ் என்பவரின் மகள் திரிஷா (20) கடந்த 4 ஆண்டுகளாக செங்குன்றம் எடப்பாளையத்தைச் சேர்ந்த ராபின் (22) என்பவரை காதலித்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரது காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிந்தது. அதனை ஏற்று இரு குடும்பத்தாரும் விரைவில் திருமணம் செய்து வைக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் இருவரும் வேப்பேரி போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள டவுட்டன் மேம்பாலம் அருகே உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அங்கு வாக்குவாதம் ஏற்பட்டதால் காதலன் ராபின், திரிஷாவை அறையில் தனியாகவிட்டு கதவை வெளியே பூட்டி சென்றுள்ளார்.
இதனால் மனமுடைந்த திரிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறிது நேரம் கழித்து லாட்ஜுக்கு திரும்பிய ராபின், உள்ளே சென்றபோது திரிஷா தூக்கில் தொங்கும் திகிலான காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் ராபின், திரிஷாவின் தோழியிடம் அழைத்துப் பேசியபோது, “திரிஷா தற்கொலை செய்துள்ளார், நானும் என் வீட்டுக்குச் சென்று தற்கொலை செய்து கொள்கிறேன்” எனக் கூறி போனை துண்டித்துள்ளார். இதையடுத்து திரிஷாவின் பெற்றோர் மற்றும் லாட்ஜ் ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாற்றுச் சாவியை பயன்படுத்தி கதவை திறந்தபோது, திரிஷா தூக்கில் தொங்கிய நிலையில் பாவாடைதான் காணப்பட்டார். உடனடியாக அவரது உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதேநேரம், ராபின் செங்குன்றம் எடப்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரது தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து உறவினர்கள் உள்ளிட்டோரும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். பெற்றோர் சம்மதத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இவ்வாறு இருவரும் உயிரை மாய்த்தது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
திரிஷா தூக்கில் தொங்கிய அறையின் கதவை வெளிப்புறமாக பூட்டி சாவியை ராபின் எடுத்துச் சென்றிருந்ததனால், போலீசார் கொலை கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இது தற்கொலைதான் என போலிசார் கூறினர். விரைவில் பிரேத பரிசோதனை அறிக்கை வரும் நிலையில், உண்மை பின்னணி தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காதல் ஜோடியின் மரணம் தொடர்பான மர்மம் தொடரும் நிலையில், போலீசார் இருதரப்பு குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
