கர்நாடக மாநிலம் சிவமோகா அருகே தும்மள்ளி கிராசில் நிகழ்ந்த சாலை விபத்தில் 26 வயது இளம்பெண் கவிதா உயிரிழந்தார். மருத்துவமனையில் இருந்து தம்பி சந்தோஷுடன் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கவிதா, முன்னால் சென்ற பைக் ஒன்றுடன் ஏற்பட்ட மோதலால் சாலையில் கீழே விழுந்தார். இதே நேரத்தில் பின்புறம் வந்த நகர பேருந்து கவிதாவின் மீது ஏறி இறங்கியது. அதே இடத்தில் கவிதா உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விபத்தில் கவிதாவின் தம்பி சந்தோஷ் சிறு அளவிலான காயங்களுடன் தப்பியுள்ளார். கவிதா ஒரு தனியார் அறுவை சிகிச்சை மருத்துவமனையில் ரேடியோலாஜிஸ்ட் ஆக பணியாற்றி வந்தார். அந்த மருத்துவமனையில் தனது கடைசி வேலை நாளை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது இந்த துயர சம்பவம் நடந்தது. வரும் செப்டம்பர் 24ஆம் தேதி கவிதாவின் திருமணம் நடைபெற இருந்தது. அதற்காக வருங்கால கணவருடன் புகைப்படக் காட்சிக்குச் செல்ல திட்டமிட்டிருந்த போது, விதி வேறு முடிவை எழுதிவிட்டது.
விபத்து தகவல் கிடைத்த உடனே பாஜக எம்.எல்.சி மற்றும் மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் தனஞ்சய் சார்ஜி மோர்ச்சுறிக்கு வந்து, கவிதாவின் குடும்பத்தினரிடம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும், அவர்களுக்குத் தேவையான நிதியுதவிகளை வழங்க வாக்குறுதி அளித்துள்ளார். திருமண கனவுடன் வாழ்க்கையை தொடங்க தயாராகியிருந்த கவிதாவின் இழப்பு, அவருடைய குடும்பம் மற்றும் நெருக்கமானவர்களிடம் ஆழ்ந்த வலியை ஏற்படுத்தியுள்ளது.
