தென்னிந்திய சினிமாவில் நீண்ட வருடங்களாக முன்னணி இடத்தை தக்கவைத்துள்ள நடிகை காஜல் அகர்வால், திருமணத்துக்குப் பிறகு குறைந்த அளவில் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது இந்தியன் 3 படத்தில் தனது பணிகளை முடித்துள்ள இவர், அதன்பின் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகும் ராமாயணா படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். தாயாகிய பிறகும், சினிமாவில் மீண்டும் முன்னணி இடத்தை பிடிக்க அவர் தன்னைத்தானே தயார்படுத்திக்கொண்டு வருகிறார். ஜிம்மிலும், உணவுக்கட்டுப்பாடுகளிலும் தீவிரம் காட்டுகிறார்.

 

இந்நிலையில், சமூக ஊடகங்களில் ஒரு திடுக்கிடும் தகவல் பரவியது. அதாவது, நடிகை காஜல் ஒரு கடும் விபத்தில் சிக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்ற செய்தியை பலரும் ஷேர் செய்து பரப்பினர். இந்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியது.

இதை பார்த்த காஜல், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்து, “இது ஒரு வெறும் வதந்தி. நான் நலமாகவே இருக்கிறேன். என் குடும்பத்தினருக்கும் என்னைக்கும் எதுவும் நடக்கவில்லை. தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்,” எனக் கூறி, அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.