திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அண்ணாதுரை என்பவரது மகள் ரிதன்யா (27). இவர் திருமணமான 78 வது நாளில் ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதாவது 300 சவரன் நகைகள் போட்டும் அது காணாது என்றும் 500 சவரன் நகைகள் வேண்டும் என்றும் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை டார்ச்சர் செய்ததால் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் ரிதன்யா கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மூவருக்கும் சமீபத்தில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் ரிதன்யா மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில் திருப்பூர் இளம்பெண் ரிதன்யா கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும் உரிய பிரிவுகளில் குற்றசாட்டுகளை பதிவு செய்ய விசாரணை நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் எந்த பலனும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
