சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், உயிரை பணயம் வைத்து செய்யப்படும் ரீல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவை வெறும் வேடிக்கையாக தொடங்கி, தற்போது ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுவதால், பொதுமக்கள் மட்டுமின்றி பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சியில் உள்ளனர்.

அதுபோல், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில்  பகிரப்பட்ட ஒரு வீடியோ, பலரின் கவனத்தையும் கோபத்தையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவில், ராகுல் குமார் யாதவ் என்ற இளைஞர், மும்பை உள்ளூர் ரயிலில் பயணிக்கும் போது, கதவுக்கு வெளியே தொங்கி சாகசம் செய்யும் காட்சி பதிவாகியுள்ளது.

வீடியோவில், அவரது ஒரு கால் ரயிலின் கதவில் ஊன்றி இருக்கும் நிலையில், மற்றொரு கால் நடைமேடையில் இழுத்துச் செல்லப்படுகின்றது. இந்த ஆபத்தான செயலை அவரது நண்பர் ரயிலின் முன்புற கதவிலிருந்து வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார். மேலும், ஒரு சிறுவனும் கதவில் தொங்கிக்கொண்டிருப்பது தெரிகிறது. இவர்கள் இருவரும் தங்கள் செயலின் ஆபத்தையும், சுற்றியுள்ள பயணிகளின் பாதுகாப்பையும் புறக்கணித்தனர் என்பது தெளிவாகக் காணப்படுகிறது.

 

வீடியோவில் மற்றொரு அதிர்ச்சியளிக்கும் தருணம், ராகுல் பயணிக்கும்போது, ஒரு பெண்ணின் மொபைல் போனைக் பறிக்க முயற்சிக்கும் காட்சி. ரயிலின் வேகம் மற்றும் இடைவெளி காரணமாக அவர் அந்த முயற்சியில் தோல்வியடைந்ததாகக் காணப்படுகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டவுடன், ஆயிரக்கணக்கானோர் அதைப் பார்த்து கடும் எதிர்வினைகளை வெளியிட்டுள்ளனர். பலர்,  “இத்தகைய சாகசங்கள் தனக்கு மட்டுமின்றி பிற பயணிகளுக்கும் உயிர் அபாயத்தை ஏற்படுத்துகின்றன” என்றும், “இது போன்ற பொறுப்பற்ற செயல்களை கட்டுப்படுத்த மும்பை போலீசும், ரயில்வே பாதுகாப்புப் படையும்தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

மேலும் தற்போது இந்த வீடியோ எங்கு, எப்போது படமாக்கப்பட்டது என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், மும்பை உள்ளூர் ரயில் நிலையங்களில் ஒன்று எனத் தெரியவந்துள்ளது.