பிரேசிலைச் சேர்ந்த 36 வயது லியாண்ட்ரோ டி சூசா என்ற நபர், ஒரு காலத்தில் உலகிலேயே அதிக டாட்டூக்கள் கொண்டவராக இருந்தார். அவரது உடலில் 95% பகுதி டாட்டூக்களால் மூடப்பட்டிருந்தது. இளமைக் காலத்தில் போதைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தால் அவதிப்பட்ட அவர், தனது தனித்துவமான டாட்டூக்களால் இன்ஸ்டாகிராமில் பிரபலமானார். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆன்மீக அனுபவத்திற்குப் பிறகு, அவரது வாழ்க்கை மாறியது. தனது டாட்டூக்கள் தனக்கு இனி பொருத்தமாக இல்லை என்று உணர்ந்த அவர், அவற்றை அகற்ற முடிவு செய்தார். இந்த செயல்முறை மிகவும் வலி மிகுந்ததாக இருந்தாலும், சாவோ பாலோ பகுதியில் உள்ள ஹெலோ டாட்டூ ஸ்டுடியோ அவருக்கு உதவியது. இப்போது, அவரது முகம் மற்றும் உடலில் இருந்த டாட்டூக்கள் அகற்றப்பட்டு, அவரை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது.
இன்ஸ்டாகிராமில் தனது அனுபவத்தைப் பகிர்ந்த அவர், டாட்டூ போடுவதாற்கு முன் இரண்டு முறை யோசிக்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த மாற்றத்தால் தனது கௌரவத்தையும், வேலை வாய்ப்பையும், குடும்பத்துடனான உறவையும் மீண்டும் பெற்றதாக அவர் கூறினார். அவரது நண்பரும் டாட்டூ கலைஞருமான மார்சியோ முன்ஹோஸ், லியாண்ட்ரோவின் இந்த புதிய பயணத்திற்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் அவரது உடலில் முழுமையாக டாட்டூக்களை அகற்ற இன்னும் எட்டு ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
