அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க 10 நாள் அவகாசம் வழங்கியதாக வெளியிட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு, கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தலைமையின் அனுமதியின்றி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக கூறி, செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து EPS ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, திண்டுக்கல்லில் இன்று காலை மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் செங்கோட்டையனின் பேச்சு குறித்த விவரங்கள் பேசப்பட்டதுடன், அவர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், விரைவில் மற்ற தலைவர்களுடனும் EPS தனிப்பட்ட ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இதனால், செங்கோட்டையன் மீது கட்சியினுள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது அரசியல் வட்டாரத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.