அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் பத்மாவதி சுகர்ஸ் நிறுவனம், 450 கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில் சிக்கியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, 450 கோடி ரூபாய் முறைகேடாக மாற்றப்பட்டதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் ஹிதேஷ் ஷிவ்கன் படேல் அளித்த புகாரின் அடிப்படையில், பினாமி சொத்து வழக்கின் கீழ் சசிகலாவும் இதில் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதமே சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் சென்னை, திருச்சி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனைகள் நடத்தியிருந்தனர். இதனால், சசிகலா மீண்டும் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

450 கோடி விவகாரம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடந்து வருவதால், அடுத்த கட்டத்தில் எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அரசியல் ரீதியாக பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.