சென்னை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மாற்றப்பட்டாலும், பெரும்பாலான தனியார் ஆம்னி பேருந்துகள் இன்றும் கோயம்பேட்டிலிருந்தே இயக்கப்படுகின்றன. இருப்பினும், முன்பு போல் வடபழனி, தாம்பரம் வழியாக செல்லாமல் தற்போது பைப்பாஸ் சாலைகள் வழியாக நேரடியாக கிளாம்பாக்கம் சென்று பயணிக்கின்றன. இதனால், முன்பதிவு செய்த பயணிகள் ஏறும் இடங்களில் ஏற்பட்ட மாற்றங்களை அறியாமை காரணமாக குழப்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சென்னைக்கு வந்திருந்த கேரளாவைச் சேர்ந்த 22 வயதான கல்லூரி மாணவர் ஜான், பெங்களூரு செல்ல தனியார் ஆம்னி பஸ்சில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் சென்று தனது பஸ்ஸை தேடிய போது, பஸ்கள் அங்குப் புறப்படுவதில்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வேறு இடத்திற்கு சென்று ஏறும்படி கூறியதையடுத்து, அந்த மாணவர் கோபமடைந்தார்.

திடீரென ஆத்திரம் அடைந்த ஜான், நேராக ஆம்னி பஸ் முன்பதிவு அலுவலகத்திற்குள் சென்று, அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த கணினி உள்ளிட்ட உபகரணங்களை உடைத்து, அலுவலகத்தில் ரகளை செய்துள்ளார். இந்த சம்பவம் கோயம்பேட்டில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர் கல்லூரி மாணவர் என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போலீசார் எச்சரிக்கை செய்து விட்டுவிட்டனர்.

இந்த சம்பவம், ஆம்னி பஸ்களில் பயணிக்க முன்பதிவு செய்யும் பயணிகள், ஏறும் இடங்களைத் தவறாக புரிந்து குழப்பமடைவதன் விளைவாக ஏற்படுகின்ற சிக்கல்களை மீண்டும் ஒருமுறை வெளிக்கொணர்கிறது. நவீன வசதிகளை ஏற்படுத்தும் பெயரில் தகவல் பரப்புவதில் ஏற்படும் குறைவுகள் பயணிகளுக்கு மிகப்பெரிய சவாலாகவே உள்ளன.