திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் பகுதியை சேர்ந்த சுஜாதா, வாட்டார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று பள்ளி முடிந்து சிறப்பு வகுப்பு நிறைவடைந்த பிறகு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, முன்னாள் மாணவரால் சுஜாதா தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, 19 வயதான பிரேம்குமார் என்ற இளைஞர், பள்ளி வளாகத்திற்கு அருகே மதுபோதையில் வந்து, மாணவர்கள் இடையே சண்டை நடந்ததாக கூறி, ஆசிரியை சுஜாதாவிடம் அதைக் குறித்து கேள்வி எழுப்பினார். பின்னர் மாணவர்களை சுஜாதா சமாதானம் செய்து அனுப்பியதையடுத்து, அவர் வீட்டிற்கு செல்ல முயன்றபோது, அருகிலிருந்த கடையில் இருந்த கட்டையால் அவரது தலையை நோக்கி தாக்க முயன்றுள்ளார். ஆனால் சுஜாதா தலைக்கவசம் அணிந்திருந்ததால் பெரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டது. எனினும், தோள்பட்டை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்ட மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து, குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி சாலை மறியல் செய்தனர். தகவல் அறிந்த திருக்களர் போலீசார் விரைந்து வந்து, தப்பி ஓடிய பிரேம்குமாரை பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் நடத்திய இளைஞர், தாக்கப்பட்ட தலைமை ஆசிரியை பணியாற்றும் அதே பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.