மங்களூருவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு, இரண்டு மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் கார்த்திக் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆன்லைனில் தொடங்கிய இந்த உறவு, நாளடைவில் காதலாக உருமாறியது. கடந்த ஜூன் மாதம் கடைசி சனிக்கிழமையன்று, கார்த்திக் அந்த மாணவியை வாலாச்சில் உள்ள ஓட்டலுக்கு மதிய உணவுக்கு அழைத்தார்.

அவரை நம்பி சென்ற மாணவி, உணவு முடிந்த பிறகு, கார்த்திக்கால் அப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகேயுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, கார்த்திக் அந்த மாணவியை வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார், மேலும் இந்த கொடூர செயலை வீடியோவாக பதிவு செய்து, மற்றவர்களுடன் பகிர்ந்தார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில், கார்த்திக்கின் நண்பர் ராகேஷ் சல்தானாவும் அங்கு வந்து, மாணவியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால் பதறிப்போன மாணவி தப்பிக்க முயன்றபோது, அவர்கள் விடவில்லை. இந்த கொடூரத்தை தாங்க முடியாத மாணவி, மங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, கார்த்திக் மற்றும் ராகேஷ் சல்தானாவை கைது செய்தது. மேலும், வீடியோவை பரப்பிய ஜீவன், சந்தீப், ரக்சித், ஷ்ரவன் மற்றும் சுரேஷ் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர். மங்களூரு காவல் ஆணையர் சுதீர் குமார் ரெட்டி கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண் மைனர் என்பதால், போக்சோ சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது,” என்றார்.