பெங்களூரு நகரம் வாழ்க்கைச் செலவு அதிகமான இடமாக அறியப்படுகிறது. இந்த டெக் சிட்டியில் நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமெனில், மாத வருமானம் லட்சங்களில் இருக்க வேண்டும். இந்நிலையில், பெங்களூரைச் சேர்ந்த ஒரு தம்பதியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதில், அவர்கள் தங்கள் மாதாந்திர செலவுகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளனர். இந்த செலவு பட்டியலைப் பார்த்து, பலரும் “இவ்வளவு செலவு செய்ய முடியுமா?” என்று வியந்து, “நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோவை ‘escapetolandscapes’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு பகிர்ந்துள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் இதைப் பார்த்து, கமெண்ட் பகுதியில் தங்கள் ஆச்சரியத்தை பதிவு செய்துள்ளனர்.
View this post on Instagram
வீடியோவில், இந்தத் தம்பதி தங்கள் மாதாந்திர செலவுகளை விரிவாக விளக்குகின்றனர். வாடகை வீட்டிற்கு மாதம் 42,000 ரூபாய், உடற்பயிற்சி மற்றும் பிலாட்டீஸ் பயிற்சிக்கு 40,000 ரூபாய், மளிகைப் பொருட்களுக்கு 20,000 ரூபாய், மின்சாரம் மற்றும் தண்ணீர் செலவுக்கு 10,000 ரூபாய், வெளியில் உணவு மற்றும் கஃபே செலவுக்கு 13,000 ரூபாய், மற்றும் பயணங்களுக்காக (இரண்டு உள்நாட்டு மற்றும் இரண்டு சர்வதேச பயணங்களுக்கு) 3,50,000 ரூபாய் செலவு செய்வதாகக் கூறுகின்றனர்.
இதுதவிர, முதலீட்டிற்காக 1,00,000 ரூபாயும், பிற செலவுகளுக்கு 15,000 ரூபாயும் ஒதுக்குகின்றனர். இதில் பயணத்திற்கு மட்டும் 3.5 லட்சம் செலவு செய்வது அவர்களின் முன்னுரிமையை காட்டுகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலர், “இவ்வளவு பணம் எப்படி சம்பாதிக்கிறார்கள்?” என்று வேடிக்கையாகவும், ஆச்சரியமாகவும் கேட்டு, இணையத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளனர்.
