உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் நடந்த மனிதாபிமானமற்ற கொடூரச் சம்பவம், சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தெருநாய் ஒன்று தனது மகனை துரத்தியதாகக் கூறி, ஒரு தந்தை நாயை  அடித்து, கடைசியில் அதன் வாயை கிழிக்க முயன்ற சம்பவம், வீடியோவில் பதிவாகி வைரலாகியுள்ளது.

வீரேந்திர குமார் என்ற நபர், தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். ஆகஸ்ட் 30 (சனிக்கிழமை) அன்று இரவு 8 மணியளவில், அவரது 8 வயது மகன் வீட்டு முன் விளையாடிக்கொண்டிருந்த போது, ஒரு தெருநாய் திடீரென குழந்தையை துரத்தியுள்ளது. அச்சத்தில் குழந்தை ஓடும்போது கீழே விழுந்து, முழங்காலில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தந்தை வீட்டு வாசலில் வெளியே வந்து, குழந்தையின் காயத்தை பார்த்ததும், “நாய் கடித்துவிட்டது” எனக் கருதி, கோபத்தில் தெருநாயை 10 நிமிடங்கள் குச்சியால் அடித்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நாயின் கழுத்தில் காலை வைத்து, அதன் வாயை கிழிக்க கையைப் புதைத்தும், தொடர்ந்து தாக்கியும் இருந்ததாக வீடியோவில் தெரிகிறது.

அந்த நாயின் வலியால் எழுந்த சத்தம், அருகிலிருந்த பொதுமக்களை அதிர்ச்சியடைய  செய்தது. சிலர் நேரில் சென்று தாக்கத்தை நிறுத்த முயன்றபோது, வீரேந்திரா அவர்கள் மீது வாக்குவாதம் செய்து, கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. வீடியோவில், “அது என் மகனை கடித்தால், எனக்கு வலிக்கிறதே!” என்று போஜ்புரி மொழியில் அவர் கத்துகிறார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதும், உன்னாவ் காவல்துறை தலையிட்டது. செவ்வாய்க்கிழமை, சமூக ஊடக தளம் X மூலம்,  “இந்த சம்பவம் தொடர்பாக தாஹி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன”
என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தனர்.