அமெரிக்காவைச் சேர்ந்த ஜூலியா ஸ்டீவர்ட் என்ற பெண்ணின் மன உறுதியும் பழிவாங்கும் கதையும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்பிள்பீஸ் (Applebee’s) நிறுவனத்தில் தலைவராகப் பணியாற்றிய ஜூலியாவுக்கு, நிறுவனத்தை லாபத்திற்கு கொண்டு வந்தால் தலைமை நிர்வாகியாக (சி.இ.ஓ.) பதவி உயர்வு வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
மூன்று ஆண்டுகள் கடின உழைப்பால், தனது குழுவுடன் சேர்ந்து நிறுவனத்தை பெரும் நஷ்டத்தில் இருந்து மீட்டு லாபத்திற்கு மாற்றினார். ஆனால், வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டிய நேரத்தில், அவரது முதலாளி வாக்கை மீறி, பதவி உயர்வு மறுத்து, காரணமும் கூறாமல் மவுனமாக இருந்தார். ஏமாற்றத்தால் ஆப்பிள்பீஸை விட்டு விலகிய ஜூலியா, இது தனது பயணத்தின் முடிவல்ல என முடிவு செய்தார்.
ஆப்பிள்பீஸை விட்டு வெளியேறிய ஜூலியா, இன்டர்நேஷனல் ஹவுஸ் ஆஃப் பான்கேக்ஸ் (IHOP) நிறுவனத்தில் சேர்ந்து, ஐந்து ஆண்டுகளில் அதை புதிய உயரங்களுக்கு கொண்டு சென்றார்.
அப்போது, IHOP புதிய நிறுவனத்தை வாங்க திட்டமிட்டபோது, ஜூலியா தனது பழைய நிறுவனமான ஆப்பிள்பீஸை வாங்க பரிந்துரைத்தார். இதன் விளைவாக, 2.3 பில்லியன் டாலர்கள் (சுமார் 20,243 கோடி ரூபாய்) மதிப்பில் ஆப்பிள்பீஸை IHOP வாங்கியது.
இதையடுத்து, ஜூலியா தனது பழைய நிறுவனத்தின் தலைவராக உயர்ந்தார். முதல் வேலையாக, தன்னை ஏமாற்றிய முன்னாள் சி.இ.ஓ.வை பதவியிலிருந்து நீக்கி, தனது திறமையையும், பழிவாங்கும் உறுதியையும் உலகிற்கு காட்டினார். இந்த சுவாரஸ்யமான கதையை அவர் சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் பகிர்ந்தார், இது இணையத்தில் பரவி, பலருக்கு உத்வேகமாக அமைந்துள்ளது.
