2017 ஜூலை 1ஆம் தேதி அறிமுகமான ஜி.எஸ்.டி. (GST), நாட்டின் பல்வேறு மாநில வரிகள் மற்றும் கூடுதல் வரிகளை ஒருங்கிணைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது.
தற்போதைய அமைப்பில் 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளில் வரி விதிக்கப்படுகிறது. தீபாவளிக்குள் ஜி.எஸ்.டி. விகிதங்கள் குறைக்கப்படும் என பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்ததையடுத்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
12% → 5%, 28% → 18% : பெரும்பாலான பொருட்களுக்கு வரிகுறைப்பு!
இந்த புதிய பரிந்துரையின் கீழ், 12 சதவீத ஜி.எஸ்.டி. அடுக்கில் உள்ள 99% பொருட்கள் 5% அடுக்குக்கு மாற்றப்பட உள்ளன. அதேபோல், 28% அடுக்கில் உள்ள 90% பொருட்கள் 18% அடுக்குக்கு மாற்றம் செய்யப்படும். இதில், நெய், குடிநீர், பானங்கள், காலணிகள், ஆடைகள், மருந்துகள், மருத்துவ கருவிகள், தினசரி பயன்பாட்டில் உள்ள பென்சில், சைக்கிள், குடை, ஹேர்பின் ஆகியவை 5% ஜி.எஸ்.டி.க்கு மாற்றப்பட உள்ளன. சிலவகை டிவி, வாஷிங் மெஷின், பிரிஜ்கள் ஆகியவையும் குறைந்த வரி அடுக்குக்கு மாற்றப்பட உள்ளன.
கார்கள், மின்சார வாகனங்கள், புகையிலைப் பொருட்கள் – விலை மாற்றம் உறுதி!
ரூ.40 லட்சத்திற்குள் உள்ள மின்சார வாகனங்களுக்கு 5% ஜி.எஸ்.டி. விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குறைந்த விலை கார்கள் 18% வரிக்குள் வர, எஸ்.யு.வி. மற்றும் சொகுசு கார்கள், சிகரெட், பான் மசாலா, புகையிலை போன்றவற்றுக்கு 40% சிறப்பு ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். இதனால் அவற்றின் விலை உயரும். பால், தயிர், முட்டை, உப்பு போன்ற தேவையான உணவுப் பொருட்களுக்கு முன்னதைப் போலவே ஜி.எஸ்.டி. விலக்கு தொடரும்.
இந்த மாற்றங்கள் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் ஒப்புதலுக்குப் பிறகு, நாட்டு மக்கள் பயன்படுத்தும் பல முக்கிய பொருட்களின் விலைகள் குறைவதற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
