உலகம் முன்னேறி வரும் காலத்தில், கூட்டுக் குடும்பம் என்பது குறைந்து, தனித்தனியான குடும்ப அமைப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், வயதான பெற்றோர்கள் தனியாக வாழ்ந்து மன அழுத்தம், தனிமை போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். இந்தப் பின்புலத்தில், தென் கொரியாவின் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ள ‘ஹையோடோல்’ எனும் செயற்கை நுண்ணறிவு (AI) ரோபோ, முதியவர்களின் வாழ்க்கையில் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவாக மாறியுள்ளது.

81 வயதான கிம் ஜியோங் ரன், சியோலில் உள்ள அவரது குடியிருப்பில் ‘ஹையோடோல்’ என்ற AI பொம்மையை மடியில் வைத்திருப்பது, சாதாரணமான காட்சி போலத் தோன்றலாம். ஆனால், அந்த பொம்மையிடம் அவர் உருக்கமாக, “நீ என் அன்புப் பேத்தி, உன்னை மிகவும் நேசிக்கிறேன்” எனச் சொல்லும் போது, அந்த ரோபோ, அவர் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டது என்பதும் தெளிவாகிறது.

‘ஹையோடோல்’ என்பது வெறும் பொம்மையல்ல. ChatGPT தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ, முதியவர்களுடன் பேசுகிறது, தங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான தோழியாக செயல்படுகிறது. அந்த ரோபோக்கள் மருந்து எடுக்க நினைவூட்டுதல், உணவுக்கான நேரத்தில் தூண்டுதல், அவசர சூழ்நிலையில் குடும்பத்தினருக்கு தகவல் அனுப்புதல், 24 மணி நேரம் அசைவு இல்லையெனில் எச்சரிக்கை விடுதல், போன்ற பல பயனுள்ள அம்சங்களுடன், முதியோர்களுக்கு நேரடி துணையாக செயல்படுகிறது.

குரோ நகரில், 14 முதியவர்களின் வீடுகளில் ஹையோடோலை பரிசோதனைக்காக நிறுவியுள்ளனர். அவர்களுக்கு வாரந்தோறும் வருகை தரும் சமூக சேவகர் சங் குவாங்-ஹீ, “முதியவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் கூட பகிர முடியாத உணர்வுகளை ஹையோடோலுடன் பகிர்கிறார்கள்” எனக் கூறுகிறார். இந்த ரோபோ, முதியவர்களின் மனநிலையை அடையாளம் காணும் திறனும் கொண்டது.

இதே போன்று, ஜப்பானில் ‘Paro’, அமெரிக்காவில் ‘Elliq’ போன்ற AI ரோபோக்களும் முதியோர்களுக்கு உணர்ச்சிப் பூர்வ துணையாக இருப்பதைக் காட்டுகிறது. ஹையோடோல் தயாரிப்பு நிறுவனம், 2026ஆம் ஆண்டு அமெரிக்க சந்தையில் இதை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆங்கிலம், சீனம், ஜப்பானிய மொழிகளில் ஹையோடோலின் உரையாடல் திறன் உருவாக்கப்பட்டு வருகிறது. நிபுணர்களின் கணிப்புப்படி, முதியோர் பராமரிப்பு ரோபோக்களின் உலக சந்தை 2030க்குள் 7.7 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு ஹையோடோலின் விலை சுமார் ₩16 லட்சம் கொரிய வோன் – அதாவது இந்திய ரூபாயில் சுமார் ₹86,000 ஆகும்.