கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கீழ்ஒரத்தூர் கிராமத்தில் ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவம், முழு கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சாஸ்தா, அகஸ்தியா தம்பதியின் மகள் சிவதர்ஷினி (8) மற்றும் அகஸ்தியாவின் தங்கை ஆஷா, வேல்முருகன் தம்பதியின் மகன் குணா (6) ஆகியோர் நேற்று மாலை ஊருக்கு அருகில் உள்ள ஏரிக்கு சென்றனர். மீன்பிடிக்கச் சென்ற ஆஷாவுடன், குழந்தைகள் இருவரும் ஏரியில் குளித்தபடி விளையாடிக் கொண்டிருந்தனர்.

இந்தநிலையில், எதிர்பாராதவிதமாக இருவரும் ஏரியில் திடீரென தத்தளித்து நீரில் மூழ்கி விட்டனர். இதனால் ஆஷா அதிர்ச்சி அடைந்து உரக்க அழைத்த நிலையில், அங்கிருந்த கிராம மக்கள் விரைந்து வந்து இருவரையும் தேடினர். சில நிமிடங்களில் அவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் ஏரியில் இருந்து மீட்கப்பட்டனர். குறுகிய நேரத்தில் தங்களது குழந்தைகளை இழந்த பெற்றோர் அழுகையில் ஆறாத வேதனையில் மூழ்கினர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே வீட்டில் வசித்த அக்கா-தம்பி ஒரே நேரத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த கிராமத்தில் சோகம் நிலவுகிறது. “ஒரே நேரத்தில் 2 குழந்தைகளை இழந்தோம்… இது மாதிரியான துயரம் யாருக்கும் வரக்கூடாது” என கூறும் அந்தக் குடும்பத்தின் துயரமே இப்போது அனைத்து மக்களின் இதயங்களையும் உருக்கும் நிலையில் உள்ளது.