மும்பையின் பார்க் சைட் பகுதியில் கடந்த ஆண்டு ஆடி கார் உரிமையாளரால் தாக்கப்பட்ட 24 வயது ஓலா ஓட்டுநர் கையூமுதீன் குரேஷி, தீவிர முதுகுத் தண்டு காயம் காரணமாக இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறார். ஆகஸ்ட் 18, 2024 அன்று காட்கோபர் மேற்கு எல்பிஎஸ் மார்கில் உள்ள வாத்வா தி அட்ரஸ் அருகே நடந்த இந்த சம்பவம், சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இணையத்தில் வைரலானது.
இதில், குற்றவாளி ரிஷப் பிபாஷ் சக்ரவர்த்தி, ஓட்டுநரை தூக்கி தரையில் வீசுவது தெரிகிறது. இதில் குரேஷிக்கு தலையின் பின்பகுதியில் பலத்த காயமும், கைகளிலும் கால்களிலும் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டன. இந்த கொடூர தாக்குதலுக்கு எதிராக காவல்நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்ய முயன்றபோது, காவல்துறையினர் தங்களை அலைக்கழித்ததாகவும், எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுத்ததாகவும் குரேஷியின் சகோதரர் ஜைனுதீன் குரேஷி தெரிவித்தார்.
மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC), இந்த விவகாரத்தில் காவல்துறையின் அலட்சியப் போக்கு குறித்த செய்தி அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. சிசிடிவி காட்சிகள் மற்றும் தெளிவான ஆதாரங்கள் இருந்தபோதிலும், பார்க் சைட் காவல் நிலைய அதிகாரி ஒருவர் இந்த தாக்குதலை “கோபத்தின் விளைவு” என எளிமையாக கூறி, தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆணையம் கண்டித்துள்ளது.
இது பொதுமக்களின் மனித உரிமைகளுக்கு எதிரான செயல் எனக் கூறி, மும்பை மண்டலம் VII இன் துணை ஆணையர் மற்றும் காட்கோபர் காவல் நிலைய உதவி ஆணையருக்கு சம்மன் அனுப்பி, செப்டம்பர் 1, 2024 தேதியிட்ட செய்தி அறிக்கையின் அடிப்படையில் உண்மை கண்டறிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஃபர்ஹான் ஷேக்கின் ஆதரவால் வழக்கை முன்னெடுக்க முடிந்ததாகவும், ஆணையத்தின் விசாரணையில் நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் ஜைனுதீன் கூறினார்.
