மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் உள்ள அர்ஜுனி கிராமத்தில் நடந்த ஒரு மனதை உலுக்கும் சம்பவம், இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் மாஹேஷ் சவுத்ரி, இரண்டாம் வகுப்பு படிக்கும் 6 வயது குழந்தை ராகுல் பலாவியை மேசையின் கீழ் அழுத்தி, முதுகில் மரக்குச்சியால் பலமுறை தாக்குவதைக் காண முடிகிறது.

குழந்தை வலியால் கதறி அழுதபோதும், ஆசிரியர் தனது கொடூரமான செயலை தொடர்ந்தார். வகுப்பில் இருந்த மற்ற குழந்தைகளும் ஆசிரியர்களும் இந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஆனால் யாரும் குழந்தையை காப்பாற்ற முன்வரவில்லை. இந்த வீடியோ இணையத்தில் பரவியதால், மக்களின் கோபம் கொந்தளித்து, ஆசிரியருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த சம்பவம், குழந்தையின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துவதோடு, உடல் ரீதியாகவும் பலத்த காயங்களை விளைவிக்கக் கூடியது என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஒழுக்கத்தின் பெயரில் இவ்வளவு கடுமையான தண்டனை வழங்குவது ஏற்புடையதல்ல என்று இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

வீடியோவில், ஆசிரியர் குழந்தையை மேசையின் கீழ் அழுத்தி, முதுகில் மரக்குச்சியால் அடிக்கும் காட்சி மிகவும் கொடூரமாக உள்ளது. இதைப் பார்க்கும் அனைவரின் மனதையும் உலுக்கிய இந்த சம்பவத்திற்கு, காவல்துறையும் கல்வித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.