உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜில் நடந்த அதிர்ச்சி சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது. புதுமணத் தம்பதியான 23 வயது நிக்கி ஷாக்யா, தனது கணவரின் சகோதரரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையை மறைப்பதற்காக, கொலையை திருட்டு சம்பவமாக காட்ட முயற்சி செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 27, புதன்கிழமை இரவு 10 மணியளவில், சிப்ரமாவு காவல் நிலையத்தின் கீழ் உள்ள ரண்வீர்பூர் கிராமத்தில் திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்து பெண்ணை சுட்டுக் கொன்றதாக 112 என்ற அவசர எண்ணுக்கு அழைப்பு வந்தது.

காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, நிக்கியின் உடலை வீட்டு அறையின் கதவு அருகே கண்டனர். அறையில் உள்ள அலமாரி திறந்து, ஆடைகள் சிதறிய நிலையில் இருந்தது, இது குற்றத்தை மறைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக தோன்றியது.

விசாரணையில், வீட்டில் இருந்த பணமும், நகைகளும் தொடப்படவில்லை என்பது காவல்துறையின் சந்தேகத்தை அதிகரித்தது. நிக்கியின் கணவர் கிருஷ்ணகாந்த், அவரது சகோதரர் பிரவீன் மற்றும் மைத்துனி ராணி ஆகியோரை காவலில் எடுத்து விசாரித்தபோது உண்மை வெளியாகியது.

கிருஷ்ணகாந்துக்கும், பிரவீனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், மது போதையில் இருந்த பிரவீன், கிருஷ்ணகாந்தை தவறாகப் பேசினார். இதை தடுக்க முயன்ற நிக்கியை, பிரவீன் தனது சட்டவிரோத .32 போர் பிஸ்டல் மூலம் நெற்றியில் சுட்டார், இதில் அவர் உடனடியாக உயிரிழந்தார்.

கொலையை மறைக்க, மூவரும் இணைந்து திருட்டு நாடகத்தை அரங்கேற்றி, நிக்கி திருடர்களை எதிர்த்ததால் சுடப்பட்டதாக கதை கட்டினர். நிக்கியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், கிருஷ்ணகாந்த், பிரவீன் மற்றும் ராணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, மூவரும் கைது செய்யப்பட்டனர்.