கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கனரா வங்கியில் புதிதாக பொறுப்பேற்ற பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மேலாளர், வங்கி அலுவலக உணவகத்தில் மாட்டிறைச்சி பரிமாறுவதற்கு தடை விதித்த உத்தரவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த மேலாளர் ஊழியர்களை மனரீதியாக துன்புறுத்தியதாகவும், அதிகாரிகளை அவமதித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு (BEFI) ஆரம்பத்தில் இதற்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது.

ஆனால், மாட்டிறைச்சி தடை குறித்த தகவல் வெளியானதும், ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை இந்த விவகாரத்தை மையப்படுத்தி, ‘மாட்டிறைச்சி திருவிழா’ நடத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்த போராட்டத்தில் ஊழியர்கள் மாட்டிறைச்சியும், பரோட்டாவும் பரிமாறி தங்கள் உரிமையை வலியுறுத்தினர். இதுகுறித்து BEFI தலைவர் எஸ்.எஸ். அனில் கூறுகையில், “வங்கியில் ஒரு சிறிய உணவகம் இயங்குகிறது, குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது.

ஆனால், இனி மாட்டிறைச்சி பரிமாறக் கூடாது என மேலாளர் உத்தரவிட்டார். இந்த வங்கி இந்திய அரசியலமைப்பின் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகிறது. உணவு என்பது தனிப்பட்ட விருப்பம்; ஒவ்வொரு இந்தியருக்கும் தங்கள் உணவை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது.

யாரையும் மாட்டிறைச்சி உண்ண கட்டாயப்படுத்தவில்லை, இது எங்கள் எதிர்ப்பின் ஒரு வடிவம் மட்டுமே,” என்றார். இந்த போராட்டத்திற்கு கேரள அரசியல் தலைவர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது. குறிப்பாக, 2017-ல் மத்திய அரசின் கால்நடை விற்பனை கட்டுப்பாட்டு உத்தரவுக்கு எதிராக இதேபோன்ற மாட்டிறைச்சி போராட்டங்கள் நடந்தது நினைவுகூரத்தக்கது.