ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தனுஷ் பள்ளியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சமூக அறிவியல் ஆசிரியர் மோகன், 8-ம் வகுப்பு மாணவனை இரும்பு மேசையை பயன்படுத்தி தாக்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மாணவனின் கை 3 இடங்களில் முறிந்து, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாதிக்கப்பட்ட மாணவன் மெடிகோவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவனின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இது குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த தயாராகி வருகின்றனர். மாணவனுக்கு இந்த அளவுக்கு தாக்குதல் நிகழ்ந்தது பள்ளியின் பாதுகாப்பு முறைகள் மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆசிரியர் மோகன் தற்போதைக்கு தலைமறைவாக உள்ளார். பிஎம் பாலேம் காவல் நிலையம் இந்த வழக்கை பதிவு செய்து, அவரது இருப்பிடத்தை கண்டறிய விசாரணை நடத்தி வருகிறது. இதேபோன்று, கேரள மாநிலம் காசர்கோடில் மற்றொரு பள்ளியில், பள்ளி முதல்வர் தாக்கியதால் மாணவனின் காது சிதைந்த சம்பவமும் சமீபத்தில் நடந்துள்ளது, இது கல்வி துறையில் அதிக கவனத்தையும் கண்டனத்தையும் உருவாக்கியுள்ளது.
