மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் ஒரு அரசு ஊழியர் சைபர் மோசடியில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அவர் வாட்ச்அப்பில் வந்த ஒரு திருமண அழைப்பிதழ் தோற்றத்தில் இருந்த கோப்பைத் திறந்ததும், தனது வங்கி கணக்கில் இருந்து 2 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. சாதாரண திருமண அழைப்பிதழ் போலவே தோன்றிய அந்த கோப்பு உண்மையில் ஒரு ஆண்ட்ராய்டு செயலி கோப்பாக இருந்ததுள்ளது. இதனால் தொலைபேசியில் மால்வேர் நிறுவப்பட்டு, பாதுகாப்பு முறைகள் முறிந்ததால் மோசடி நடந்தது.
பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் தெரிவித்ததாவது, “எனக்கு தெரியாத எண்ணிலிருந்து 30 ஆகஸ்ட் என்ற தேதியுடன் ஒரு திருமண அழைப்பிதழ் வந்தது. அதில் இணைக்கப்பட்ட கோப்பைத் திறந்ததும், என் செல்போனில் மால்வேர் நிறுவப்பட்டது. இது என் தனிப்பட்ட தகவல்களையும் வங்கி கணக்கு விவரங்களையும் திருடி, சற்று நேரத்திற்குள் இரண்டு லட்சம் ரூபாய் என் கணக்கிலிருந்து மோசடியாக இழந்துவிட்டேன்” என்று கூறினார்.
இதுகுறித்து அந்த மூத்த அரசு ஊழியர் ஹிங்கோலி போலீசில் புகார் அளித்தார். புகாரைப் பெற்ற சைபர் காவல்துறையினர், தெரியாத நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. போலீசார் கூறுவதாவது, “இன்று குற்றவாளிகள் புதுமையான முறைகள் மூலம் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
திருமண அழைப்பிதழ், சலுகை விளம்பரம், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் என பல வஸ்துக்களை வைத்து மோசடி செய்வதால், எந்த கோப்பையும் திறக்கும் முன் அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும்” என எச்சரிக்கை விடுக்கின்றனர். பொதுமக்கள் இந்தத் தகவலை மனதில் வைத்து, இணைய பாதுகாப்புக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
