அமெரிக்காவின் நியூ ஷம்பயர் நகரில் வசித்து வந்த ரியான் லாங் (48) என்ற நபர், கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சையில் இருந்துள்ளார். தொடக்கத்தில் நல்ல உடல்நலத்துடன் இருந்த அவர், இப்போது படுக்கையிலேயே இருப்பதோடு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி எமிலி லாங் (34) இவரை கவனிப்பதற்காக வேலை விட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ஆனால் மருத்துவச் செலவுகள் மற்றும் குடும்பச் சுமை காரணமாக, எமிலிக்கு மன அழுத்தம் அதிகரித்துள்ளது. நிதிச்சுமையில் சிக்கிய எமிலி, ஒரே நேரத்தில் கணவரையும், குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்வதற்கு திட்டமிட்டார். அதன்படி, வீட்டில் படுக்கையில் இருந்த ரியானை பலமுறை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். பின்னர் தனது முதல் இரண்டு குழந்தைகளையும் சுட்டுக் கொன்றார். பின்பு துப்பாக்கியால் சுட்டு அவரும் தற்கொலை செய்துகொண்டார்.

துப்பாக்கி சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், வீட்டில் நால்வர் சடலமாக கிடப்பதை கண்டனர். அதேசமயம், 3 வயதுடைய சிறுவன் மட்டும் உயிருடன் இருந்ததை கண்டு மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்த விசாரணையில், கணவரை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டது.