கேரளாவின் திருச்சூர் மாவட்டம் கண்ணன்குழி பகுதியில் கடந்த நான்கு நாட்களாக குட்டியுடன் வந்த யானை கூட்டம், விவசாய நிலங்களை நாசமாக்கியும், அப்பகுதி மக்களை அச்சுறுத்தியும் வந்தது. பொதுமக்கள் இரவிலும் அச்சத்துடன் இருப்பது நாள்தோறும் அதிகரிக்கின்ற சூழ்நிலையில், நேற்று நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, அந்த யானை கூட்டம் அப்பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதிக்குள் புகுந்தது. இரும்பு கதவை உடைத்து உள்ளே சென்ற யானைகள், விடுதியின் சுற்றுவட்டாரத்தில் சுதந்திரமாக உலாவியது. அந்தக் காட்சிகளை பார்த்த அங்கு இருந்தோர் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். விடுதியின் ஊழியர்கள் மற்றும் விருந்தினர்கள் திடுக்கிட்ட நிலையில், யானைகளை விரட்டுவதற்காக பட்டாசுகள் வெடித்தனர்.
இந்த பரபரப்பான சூழலை அங்கு இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. யானை கூட்டம் விடுதிக்குள் புகுந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
