சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற தி.மு.க. மாணவர் அணி நிகழ்ச்சியில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்விக் கொள்கைகளை தொடர்ந்து விமர்சித்த அவர், “மாநிலக் கல்விக் கொள்கை இரு மொழிக் கொள்கையை பின்பற்றுகிறது; ஆனால் தேசியக் கல்விக் கொள்கையில் மூன்று மொழிக் கொள்கை கூறப்பட்டுள்ளது. மூன்றாவது மொழி என்ன என்பது அனைவரும் புரிந்துகொள்வார்கள்” என எச்சரிக்கை சாயலில் கருத்து தெரிவித்தார்.

“நான் ஆறு மொழிகள் பேசுகிறேன், ஆனால் என் தாய்மொழி தமிழ் தான். தேவையான நேரத்தில் தேவையான மொழியை கற்றுக்கொள்கிறேன்” என்று கூறிய கமல்ஹாசன், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் “போர் என்றால் ஆங்கிலம் தான் கேடயம்” என்ற வரிகளை மேற்கோள் காட்டினார். “போருக்கான நாளை பழைய பஞ்சாங்கம் அடிப்படையாக்க வேண்டிய அவசியமில்லை, புதிய நாளை நாம் தேர்ந்தெடுப்போம். அந்த நாளில் வெற்றி நிச்சயம்!” என உறுதி கூறினார்.

திருவள்ளுவரை தனது மய்யத் தூணாக வணங்கும் கமல், “அவரது தராசின் நுனியில் நம் தலைவர்கள் நிற்க வேண்டும். அவர்களுக்குச் சொந்தமாக அடிவருடுவதில் எனக்குக் கோபமும் இல்லை, வெட்கமும் இல்லை. அது என் கடமை” என உணர்வுப்பூர்வமாக பேசினார். “வெளியில் பேசும்போது நான் எச்சரிக்கையாக இருக்கிறேன்” எனவும், “அனைத்துத் தலைப்புகளும், வேடங்கள் எனக்கு பொருந்தும். நான் இயக்கியும் வேஷம் கட்டியும் பார்த்தவன்” எனவும் தனது திரைத்துறை அனுபவங்களை அரசியல் தளத்தில் இணைத்தார்.

“எனக்கு மூன்று அம்மாக்கள் – எனை பெற்றெடுத்த தாய், சினிமா தாய் மற்றும் இந்திய தாய்” எனக் கூறிய கமல்ஹாசன், என்னை பெற்றெடுத்த தாய் இறந்து விட்டார்கள். “இந்த இரண்டு தாய்களுக்காக என் இரண்டு தோள்களும் இருக்கின்றன. யாரும் என்னை இடது பக்கம் அல்லது வலது பக்கம் இழுக்க முடியாது. என் பெயர் கமல்ஹாசன். இந்த குளத்தில் தான் நான் பூப்பேன்” என்று தனது அரசியல் நிலைப்பாட்டையும் அடையாளத்தையும் தெளிவாகக் கூறினார்.