மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் விநாயக் என்பவர் அரசு வழக்கறிஞராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் நீதிமன்ற வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் விநாயக் எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ளனர்.
அதில் நீதிபதி ரபிக் ஷேக், நீதிமன்ற எழுத்தர் டெய்டே ஆகியோர் தான் எனது தற்கொலைக்கு காரணம். நீதிபதி அனைவரின் முன்னிலையிலும் என்னை அவமானப்படுத்துகிறார். என் பேச்சுக்கு செவி சாய்ப்பதே இல்லை. அவருடன் சேர்ந்து எனக்கு ஒத்துழைப்பு வழங்காததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்வதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விநாயக்கின் மகனும் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கடந்த ஜனவரி மாதம் முதல் வத்வானி நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக வேலை பார்த்த எனது தந்தை கடந்த சில வாரங்களாகவே மன உளைச்சலில் இருந்தார். இது குறித்து நாங்கள் கேட்டபோது ரபீக் ஷேக் எந்த காரணமும் இல்லாமல் அவமானப்படுத்துவதாகவும், டெய்டே அவதூறாக பேசுவதாகவும் கூறி வருத்தப்பட்டார்.
எனவே தந்தையின் இறப்பிற்கு காரணமான இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டியதாக நீதிபதி உட்பட இரண்டு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
