வேலூர் மாவட்டம் பொய்கை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ராணுவத்தில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். செகந்திராபாத்தில் இருந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த பிரபாகரன் விடுமுறை முடிந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்கு புறப்பட்டார்.
அவர் காட்பாடி ரயில் நிலையத்திற்கு தகுந்த மனைவி சித்ராவுடன் வந்தார். சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்வதற்காக பிரபாகரன் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். ரயில் வந்ததும் பிரபாகரன் ரயிலில் ஏறினார்.
அப்போது பிரபாகரனின் ஐடி கார்டு தன்னிடம் இருப்பதை தாமதமாக அறிந்த சித்ரா புறப்பட்டு கொண்டிருந்த ரயிலில் கணவரை அழைத்தபடி ஓடி சென்று ஐடி கார்டை அவரிடம் கொடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சித்ரா ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்ததால் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரபாகரன் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி தனது மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சித்ராவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
