2026 சட்டமன்றத் தேர்தலை முதன்முறையாக சந்திக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு, மதுரையில் பாரபதியில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழகமெங்கும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். ஆனால் விழாவில் ஏற்பட்ட பரபரப்பான ஒரு நிகழ்வு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த பிரபாகரன் (வயது 33), நண்பர்களுடன் வேனில் மதுரை மாநாட்டிற்குச் சென்றுள்ளார். சக்கிமங்கலம் அருகே சிறுநீர் கழிப்பதற்காக வெளியே சென்ற அவர், பின்னர் திரும்பி வரவில்லை. தேடிய நண்பர்கள் அவரை மயங்கி விழுந்த நிலையில் கண்டுபிடித்து, உடனே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தீவிர சிகிச்சை அளித்தும், பிரபாகரன் உயிரிழந்தார்.
இதற்கு மேலாக, மாநாட்டில் கலந்து கொண்ட நீலகிரியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் மூச்சுத்திணறலால் மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற இவர்களின் மரணம், தவெக தொண்டர்களிடையே பெரும் சோகத்தையும், குடும்பத்தினரிடையே மிகுந்த மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
