கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ்நகர் இந்திரா காந்தி சாலையில் வசித்து வந்தவர் விவசாயி ராஜா (40). எம்.எஸ்.சி பட்டதாரியான அவர், மனைவி சுகன்யா, மகன் குமரகுரு (12), மகள் தன்யாஶ்ரீ (7) ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சில நாட்களுக்கு முன்பு சுகன்யா தனது தாய் வீட்டான மேல்மாம்பட்டிற்கு சென்றுவிட்டார்.
நேற்று பிற்பகல் ராஜா தனது மனைவி மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் உருக்கமான ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நான் படித்த முட்டாள்… யாருக்கும் சுமையாக இருக்க விரும்பவில்லை… என் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன்… என்னையும் என் குழந்தைகளையும் மன்னித்து விடுங்கள்” என்று உருக்கமாக கூறியிருந்தார்.
இதைக் கேட்ட உறவினர்கள் மற்றும் சுகன்யா பதற்றத்துடன் உடனடியாக ராஜாவின் வீட்டுக்கு ஓடிச் சென்றனர். அப்போது வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில், ஒரே சேலையில் இரண்டு குழந்தைகளும், துப்பட்டாவில் ராஜாவும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர். அந்த காட்சி பார்த்த சுகன்யா கதறி அழுத நிலையில், அங்கிருந்த அனைவரும் கலங்கினர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மனைவி பிரிந்து சென்ற மனவேதனையால் ராஜா இந்த துயரகரமான முடிவை எடுத்திருக்கலாம் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், அவரை இப்படிச் செய்ய தூண்டிய பிற காரணங்கள் உள்ளனவா என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தந்தையும், இரு சிறுமிகளும் உயிரிழந்த இந்த பரிதாப சம்பவம் பண்ருட்டி பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
