சென்னை பல்கலைக்கழக வளாக நுழைவாயில் அருகே பர்தா அணிந்தபடி ஒருவர் நீண்ட நேரமாக நின்றதால், காவலாளிகள் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த ரோந்து போலீசார் அவரை விசாரித்தபோது, பர்தா அணிந்திருந்தவர் பெண் அல்ல, ஆண் என்பது தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் 3 கத்திகள் இருந்தன. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்த கரண் மேத்தா (24) என அடையாளம் காணப்பட்டார்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிப்பட்டன. ஆன்லைன் மூலம் துணி வியாபாரம் செய்து வந்த அவர், தனியார் வங்கியில் கடன் வாங்கியிருந்தார். அந்த கடனை அடைக்க முயன்று ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு, 10 லட்சம் ரூபாய் இழந்ததாகவும் கூறினார். தந்தை 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், மாற்றுத்திறனாளியான தாயாரை பராமரிக்கும் சுமையால் கடன் நெருக்கடி, நிதிச் சுமை காரணமாக மன அழுத்தத்தில் சிக்கியதாகவும் வாக்குமூலம் அளித்தார்.
மேலும், சென்னை பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தனது தோழியை கடைசியாக பார்த்துவிட்டு, வளாகத்திற்குள் மறைவான இடத்தில் தற்கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிவித்தார். யாரும் சந்தேகிக்காமல் நுழைய பர்தா அணிந்ததாகவும், தனது உடல் அழுகிய பின் அடையாளம் காண முடியாமல் போலீசார் பெண் என நினைத்துவிடுவார்கள் என்பதே தனது எண்ணம் என்றும் கூறினார்.
அவரது செயல்பாடுகள் மனநோய் பாதிப்பு கொண்டவரைப் போல இருந்ததால், எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், அவருக்கு மனநல ஆலோசனைகள் வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்த சம்பவம் சென்னை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
