விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மீனம்பட்டியைச் சேர்ந்த சுமன் (32) என்ற நபர், சிறுநீர் கல்லடைப்பு நோய்க்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக அவர், மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனது உறவினரான மூதாட்டியின் வீட்டில் தங்கியிருந்தார்.

அந்த வீட்டில் மூதாட்டியின் 16 வயது இரட்டைப் பேத்திகள் அவரது பாதுகாப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில், ஒரு இரவு சிறுமிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது, சுமன் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சிறுமிகளின் கூச்சலால் பயந்து அவர் அங்கிருந்து தப்பியோடினார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஒரு சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து சிறுமிகளின் பாட்டி, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சுமனைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், சிறுமிகளின் 19 வயது சகோதரர், மதுரை அரசு மருத்துவமனையில் சுமனைப் பார்த்தார். ஆத்திரமடைந்த அவர், சுமனை வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பினார். படுகாயமடைந்த சுமன், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக மதிச்சியம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.