சென்னை மாதவரத்தைச் சேர்ந்த 55 வயது ஆனந்தன், மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரளா, இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் பெருங்களத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், மூத்த மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து, நிச்சயதார்த்த ஏற்பாடுகளை பெற்றோர் செய்தனர்.
ஆனால், திருமணத்தில் விருப்பமில்லை எனக் கூறிய மூத்த மகள், சில நாட்களுக்கு முன் தற்கொலை முயற்சி செய்தார். அவரை உறவினர்கள் மற்றும் பெற்றோர் மீட்டு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர், அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஆனந்தன், நேற்று மதியம் கொளத்தூரில் உள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்றார். அங்கு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, உறங்குவதற்காக படுக்கையறைக்குச் சென்றார்.
ஆனால், மாலை வெகு நேரமாகியும் அவர் வெளியே வராததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு, மின்விசிறியில் ஆனந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திரு.வி.கா.நகர் போலீசார், ஆனந்தனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
