ராணிப்பேட்டை மாவட்டம் செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரி. இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியினருக்கு ஐயப்பன், செல்வம், அரவிந்த் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக செல்வி தனது கணவரை விட்டு பிரிந்து மூன்று மகன்களுடன் வசித்து வருகிறார்.
இதில் மூன்றாவது மகன் அரவிந்த்(20) சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 22 வயதான செல்வம் சொந்த ஊரிலேயே எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது தாயை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அரவிந்த் விடுமுறையில் தனது தாய் மற்றும் அண்ணனை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். சம்பவம் நடந்த அன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த செல்வம் செல்வியை அடித்து கொடுமைப்படுத்தினார். அவர் வலி தாங்க முடியாமல் அலறி சத்தம் போட்டதால் அரவிந்த் தனது அண்ணனை கண்டித்துள்ளார்.
அதற்கு செல்வம் சின்னப் பையன் எல்லாம் பேசக்கூடாது எனக் கூறி அலட்சியமாக நடந்து கொண்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த அரவிந்த் அரிவாளால் செல்வத்தை சரமாரியாக வெட்டினார். இதனால் படுகாயம் அடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் உடல் நலம் சரியில்லாமல் செல்வம் இறந்து விட்டதாக கூறி அவசர அவசரமாக உறவினர்களுடன் இறுதி சடங்கு ஏற்பாடுகள் நடந்தது. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அரவிந்த் தனது அண்ணனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
