ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே ஆட்டையாம்பாளையம் பகுதியில் உள்ள கீழ் பவானி கிளை வாய்க்காலில் வெள்ளை நிற சாக்கு மூட்டை ஒன்று மிதப்பதாகவும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த சித்தோடு போலீசார், மூட்டையைத் திறந்து பார்த்தபோது, 25 வயது மதிக்கத்தக்க ஒரு வடமாநில இளைஞரின் உடல் அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடலில் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் இருந்தது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டு, சாக்கு மூட்டையில் கட்டி வாய்க்காலில் வீசப்பட்டது உறுதியானது. மோப்ப நாய் உதவியுடன் அப்பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. மேலும்  வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முகமது பைசல் (22) என்பது தெரியவந்தது. இவருடன் அதே மாநிலத்தைச் சேர்ந்த முகமது நூர் (26) மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோர் ஈரோடு மாவட்டம் நெச்சிப்பாளையம் புதூர் பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் துணி அரைத்து நூல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

முகமது பைசலுக்கும், முகமது நூரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததால், இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 12-ம் தேதி மூவரும் மது அருந்தியபோது, இதுகுறித்து ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த முகமது நூரும், சிறுவனும் சேர்ந்து முகமது பைசலை கட்டையால் தாக்கி கொலை செய்து, உடலை சாக்கு மூட்டையில் கட்டி வாய்க்காலில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. மேலும் யாருக்கேனும் இந்தக் கொலையில் தொடர்பு உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.