தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியைப் பற்றிய பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் முன்வைத்த குற்றச்சாட்டு தவறானது எனத் தமிழக அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டு முகவரியில் 30 வாக்காளர்கள் உள்ளனர். இது வாக்காளர் பட்டியலில் நடந்த முறைகேட்டை காட்டுகிறது,” என்று கூறியதைக் தமிழக பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, தமிழக தகவல் சரிபார்ப்பகம் மேற்கொண்ட ஆய்வில், குற்றச்சாட்டுகள் உண்மையற்றவையென உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கமாக வெளியிடப்பட்ட தகவலில்,
“கொளத்தூர் தொகுதியில் உள்ள 84ஆம் வாக்குச்சாவடியில் வீட்டு எண் 11 எனக் கூறப்பட்ட இடம் தனி வீடல்ல. அது ‘ஏ.எஸ். வீனஸ் கோர்ட்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு. இந்த குடியிருப்பில், வாக்காளர் பட்டியலில் வரிசை எண் 40 முதல் 75 வரை உள்ளோர் வசிக்கின்றனர். அதாவது, பல குடும்பங்கள் வசிக்கும் இடம் இது.
மேலும், ரஃபியுல்லா என்ற ஒரே பெயரில் மூன்று வாக்காளர்கள் உள்ளதாகக் கூறியதும் தவறு. ரஃபி என்ற பெயர் வாக்காளர் பட்டியலில் பல இடங்களில் வந்திருக்கலாம். ஆனால், அது ஒரே நபரின் பெயராக இல்லாமல், அவரின் தந்தை, கணவர் என்ற பகுதிகளில் இடம் பெற்றுள்ளதாகும்.
அதேபோல், வாக்குச்சாவடி எண் 157இல் ‘ரஃபியுல்லா’ என்ற பெயர் வேறொரு முகவரியில் இடம்பெற்றுள்ளது. இது அனைத்தும் தவறாக விளக்கப்பட்டுள்ளது.
இத்துடன், குறித்த இடத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமே வசிக்கின்றனர் எனப் பரப்பப்பட்ட வதந்தியும் உண்மையற்றது. அந்த குடியிருப்பில் அனைத்து மதத்தினரையும் சேர்ந்தவர்களும் வாழ்கின்றனர். “எனவே தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம், பகிர வேண்டாம்,” எனக் கேட்டுக்கொண்டுள்ளது தமிழக தகவல் சரிபார்ப்பகம்.
இதையடுத்து, அரசியல் வட்டாரங்களில் இந்த விவகாரம் மேலும் தீவிரமாகியுள்ளது. கடந்த நாட்களாக, வாக்காளர் பட்டியலில் முறைகேடு, போலி வாக்காளர்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, மு.க. ஸ்டாலினின் தொகுதி குறித்தும் பாஜகவின் குற்றச்சாட்டுகள் வெளியாகி, தற்போது அது தவறானதெனத் தெளிவான விளக்கம் கிடைத்துள்ள நிலையில், இணையவழி பரப்புரைகளில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பு கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
முதல்வர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள்: அது தனி வீடல்ல, அடுக்குமாடி குடியிருப்பு பகுதி !
‘கொளத்தூர் தொகுதியில் 84ம் வாக்குச்சாவடியில் வீட்டு எண் 11ல் 30 வாக்காளர்கள் உள்ளனர். அதில், ரஃபியுல்லா என்று ஒரே பெயரில் 3 வாக்காளர்கள் உள்ளனர்’ என்று பாஜக எம்.பி பேசியதை தமிழக… https://t.co/6aexDybv2S pic.twitter.com/RlzUaCZomf
— TN Fact Check (@tn_factcheck) August 16, 2025
