சென்னை ராயப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு வசிக்கும் இளம் பெண் ஒருவர் சமீபத்தில் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது சிறுமியான மகளை மாமனார் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டினார்.

இதன் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த மாமனாரை கைது செய்து விசாரணை நடத்தினர். ஆனால், விசாரணையில் அவர் குற்றச்சாட்டை மறுத்ததோடு, தனது மருமகள் வேண்டுமென்றே அபாண்டமாக பழி கூறுவதாக விளக்கமளித்தார். இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, “என் தாத்தா எதுவும் தவறாக செய்யவில்லை.

என் அம்மா தான் இப்படி பொய்யாக புகார் அளித்துள்ளார்” என்று கூறியதும், போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த இளம் பெண்ணிடம் போலீசார் கடுமையாக விசாரித்ததில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. செல்வந்தரான மாமனாருக்கு வீட்டு வாடகை மூலம் மாதம் 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்து வந்தது.

அதே நேரத்தில் எம்.இ பட்டதாரியான அவரது மகன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் சும்மா இருந்ததால், தந்தை அடிக்கடி திட்டி வந்துள்ளார். இதனால், தந்தையிடம் ஆத்திரமடைந்த மகனும், அவரது மனைவியும் இணைந்து சதித்திட்டம் தீட்டி, பாலியல் புகாரை பொய்யாக அளித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த சம்பவத்தில், தனது மாமனாரை சிறைக்கு அனுப்பும் நோக்கில் மகளை கூட பயன்படுத்தி பொய்யான போக்சோ புகார் அளித்த மருமகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சதியின் மூல காரணமாக இருந்த மகன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தொடர்பான தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. தற்போது, இந்த பரபரப்பு சம்பவம் ராயப்பேட்டை பகுதிகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.