இந்தியாவில் சாலையைக் கடக்கும் ‘தேசி வழி’யை வெளிநாட்டு பெண் ஒருவர் கற்றுக்கொடுத்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த வேரா புரோகோஃபீவா ஜெய்ப்பூருக்குச் சென்றபோது, பிரபலமான ஹவா மஹால் முன்பு பதிவு செய்யப்பட்ட இந்த வேடிக்கையான காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கமான @vera__india-வில் பகிர்ந்துள்ளார். “இந்தியாவில் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் விதி சாலையைக் கடப்பது” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ, பயனர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
சுமார் 2.5 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ள இந்த வீடியோவில், வேரா தனது தோழியிடம் இந்தியாவில் போக்குவரத்து நெரிசலான சாலையை எவ்வாறு பாதுகாப்பாக கடக்க வேண்டும் என்று விளக்குகிறார். முதலில் வாகனங்களை நிறுத்தும்படி கையை அசைத்து, பின்னர் மெதுவாக சாலையைக் கடப்பது போன்ற முறைகளை அவர் காட்டுகிறார்.
இந்த பதிவுக்குப் பலரும் நகைச்சுவையுடன், சிலர் எச்சரிக்கையுடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “வேரா, நீ சரியாக கற்றுக்கொண்டாய், ஆனால் கார் நிற்கவில்லை என்றால் கத்துவதை மறக்காதே” என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “அதிக போக்குவரத்து இருக்கும் போது நடுவில் நிற்காதீர்கள்” என சிலர் அறிவுறுத்தியுள்ளனர். ஓட்டுநர்கள் எப்போதும் வாகனங்களை நிறுத்த மாட்டார்கள் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என சிலர் எச்சரித்துள்ளனர். இன்னொருவர் நகைச்சுவையாக, “இந்த ரகசியம் இந்தியாவிலிருந்து வெளியேறியது எப்படி? நிச்சயம் நமக்குள்ள ஒருவர்தான் காரணம்” என பதிவிட்டுள்ளார்.
