இங்கிலாந்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் அலிஸ் கிரீவ்ஸ், தன்னுடைய மார்பில் சிறிய கட்டி இருப்பதை கவனித்து மருத்துவரை அணுகியபோது, “இந்த வயதில் மார்புப் புற்றுநோய் வராது” என்று கூறி பரிசோதனை செய்யாமல் அனுப்பிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது அது வெறும் உடற்பயிற்சி காரணமாக ஏற்பட்ட தசை பிரச்சனை என கூறப்பட்டதால், சரியான பரிசோதனை  தாமதமானது. மூன்று ஆண்டுகள் கழித்து, அவரது புற்றுநோய் 4-ஆம் நிலைக்கு (Stage 4) சென்று, மூளை மற்றும் நுரையீரலுக்கு பரவியிருப்பதாக தெரியவந்தது.

லெஸ்டரில் வசிக்கும் அலிஸ், இறுதி பரிசோதனைக்கு  பிறகு 16 சுற்று கீமோதெரபி சிகிச்சை பெற்றார். ஆனால், புற்றுநோய் அவரது நுரையீரல் மற்றும் பிற உடல் உறுப்புகளுக்கும் பரவிவிட்டது. முன்னாள் நிதி துறையில் பணிபுரிந்த அவர், “முதலில் பரிசோதனை சரியான நேரத்தில் செய்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. மருத்துவர்கள் ‘வயது குறைவாக இருப்பதால் புற்றுநோய் வராது’ என்ற வார்த்தையை நம்பி விட்டேன்.

அவர்கள்தான் நிபுணர்கள் என்பதால் அவர்களின் சொல் மீது நம்பிக்கை வைத்தேன்” என்று கூறினார். இரட்டை மார்பு அகற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மூளையில் புற்றுநோய் பரவியதால் கடந்த மாதம் அவசர அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டது. தற்போது அந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், நுரையீரலில் உள்ள புற்றுநோயை அகற்ற தொடர்ந்து சிகிச்சை நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அலிஸ், மார்பில் எந்த விதமான மாற்றம், கட்டி, தோல் சுருங்கல் அல்லது நிப்பிள் நிலைமாற்றம் போன்றவை தெரிந்தவுடன் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தன்னுடைய நிலை முதலில் கண்டறியப்பட்டிருந்தால் உயிர் ஆபத்து குறைந்திருக்கும் என்றும், பிறரும் இதுபோன்ற நிலையை சந்திக்காதவாறு மருத்துவரிடம் கூடுதல் பரிசோதனைக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.

மருத்துவர்கள், வீட்டிலேயே செய்யக்கூடிய சுய மார்பு பரிசோதனை (Self-breast exam) மார்புப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் என்று கூறுகின்றனர். கண்ணாடி முன் கைகளை உயர்த்தி வடிவ மாற்றங்களை கவனித்தல், விரல்களின் முனையால் முழு மார்பு பகுதியையும் அழுத்தி பரிசோதித்தல், படுத்த நிலையில் மார்பு மற்றும் கைமடிப்புப் பகுதியை பரிசோதித்தல் போன்ற முறைகள் இதற்கு உதவும் எனவும் அவர்கள் விளக்குகின்றனர்.

பெரும்பாலான கட்டிகள் புற்றுநோயாக இருக்காமல் இருந்தாலும், எந்த மாற்றத்தையும் மருத்துவரிடம் தெரிவிப்பது அவசியம் எனவும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.