டெல்லி கரவால் நகர் பகுதியில் ரக்ஷாபந்தன் நாளில் நடந்த மூன்று கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதீப் என்ற நபர், தனது மனைவி மற்றும் 5, 7 வயதுடைய இரு மகள்களை கழுத்து நெரித்து கொடூரமாக  கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளார். தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்திலேயே மூவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பினர். இதனால், திருவிழா கொண்டாட்டத்தில் இருந்த பகுதி மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஆரம்ப விசாரணையில், பிரதீப்புக்கு கடன் சுமை இருந்தது, அதனால் மனஅழுத்தம் காரணமாக இந்தக் கொடூரம் செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவர் கைது செய்யப்பட்ட பிறகே உண்மையான காரணம் வெளிவரும் எனவும் கூறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் சாட்சியங்களை சேகரித்து, அண்டை வீட்டாரிடமிருந்து தகவல்கள் பெற்றனர்.

இந்த சம்பவத்துக்கு தொடர்பாக கொலைக்கான பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பிரதீப்பை பிடிக்க சிறப்பு போலீஸ் குழுக்கள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றன. குடும்பத்தினரின் உயிரிழப்பு மற்றும் சம்பவத்தின்கொடூர  தன்மை அப்பகுதி மக்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.