கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே மந்திரா மண்டல்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் பிஜோன் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாக பிஜோன் மந்திரா ஆகியோர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த தம்பதியின் சொந்த ஊர் மேற்கு வங்காளமாகும். பிஜோனுக்கு, சுமன் மண்டல்(29) என்ற நண்பர் இருக்கிறார். இவர்கள் இருவரும் அந்தமானுக்கு வேலைக்கு சென்றுள்ளனர்.

சமீபத்தில் சுமன் மட்டும் பெங்களூருக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5-ம் தேதி அன்று மந்திரா வீட்டிற்கு சென்ற சுமன் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் வீட்டின் மற்றொரு அறையில் சுமனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மந்திரா அவரது நண்பரான சுமனிடம் பேசி பழகி உள்ளார். ஆனால் கடந்த ஐந்தாம் தேதி மந்திரா வீட்டிற்கு சென்ற சுமன் தன்னுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்ளும்படி வற்புறுத்தி இருக்கலாம் என்றும், அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்காததால் கொலை செய்திருப்பார் என்றும்  போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.