ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில், காட்டில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தெரிவித்ததாவது, பாதிக்கபட்ட பெண் தனது மருமகனுடன் செண்டிபாடா பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் சாலையோர காட்டிற்குச் சென்றபோது, டிராக்டரில் வந்த மூவர் அவரை கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அந்த சம்பவம் கடந்த ஜூலை 3ஆம் தேதி நடந்தாலும், பாதிக்கப்பட்டவர் ஆகஸ்ட் 5ஆம் தேதி பாக்டியா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகார் கிடைத்தவுடன், மாவட்ட எஸ்.பியின் நேரடி மேற்பார்வையில் மூன்று சிறப்பு போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு, தடயவியல் நிபுணர்கள் மற்றும் நாய் படைகள் உதவியுடன் விரிவான விசாரணை நடத்தப்பட்டது.
அதில், 2 சிறார்கள் உட்பட மூவரும் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் டிராக்டர், மொபைல் போன்கள், குற்றம் நடந்தபோது அணிந்திருந்த உடைகள் மற்றும் உயிரியல் சான்றுப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அங்குல் காவல்துறை, இந்த வழக்கை ‘சிறப்பு அறிக்கை’ மற்றும் ‘சிவப்பு கொடி’ வழக்காக அறிவித்துள்ளது. 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும், குற்றவாளிகளுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை கிடைக்க வழக்கின் விசாரணையை விரைவுபடுத்த நீதிமன்றத்தில் கோரிக்கை விடுப்போம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
