மத்தியப் பிரதேச மாநிலத்தின் பர்வானி மாவட்டத்திலுள்ள தாலுன் கிராமத்தில், மக்கள் மழை பெய்ய வேண்டி உயிருடன் இருப்பவர் ஒருவருக்கே சவப்பெட்டி போட்டு இறுதி ஊர்வலமே நடத்தினர். இந்த சம்பவம் முதலில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஏனெனில், ஊர்வலத்தில் மெளன இசை, துக்க பாடல்கள், மேள தாளங்கள் என அனைத்தும் ஒரு மரண ஊர்வலத்தை போல் இருந்தது. ஆனால் உண்மை பின்னணி தெரிய வந்தபோது, மக்கள் தங்கள் தலையை அடித்துக்கொண்டு ‘ஏமாந்துடோமே’ என கூறும் நிலைக்கே சென்றனர்.
இந்த சம்பவம் திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் பிலாத் தேவ் கோவிலில் இருந்து துவங்கியது. கிராமத்தின் முக்கிய சாலைகள் வழியாக அந்த “இறுதி ஊர்வலம்” நகர்ந்தது. இந்த ஊர்வலத்தில், ‘ரகுபதி ராகவ் ராஜாராம்’ உள்ளிட்ட துக்க இசை வாசிக்கப்பட்டது.
இதற்குப் பின்னணி என்னவென்றால், தாலுன் கிராமத்தில் நீண்ட நாட்களாக மழை பெய்யவில்லை. விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாரம்பரிய நம்பிக்கையின் அடிப்படையில் இந்த “ஆடம்பர” இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது.
இறுதியாக சிண்டி போர் என்ற இடத்தில், ஒரு மரபு பொம்மைக்கு தீ வைத்து ‘டோட்கா’ சடங்கு நிறைவுசெய்யப்பட்டது. இந்திரன் மகிழ்ந்து மழையை அருளுவார் என்ற நம்பிக்கையுடன் மக்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
