சமீபத்தில் பிரபல நடிகர்கள் விளம்பரத்தில் நடித்ததை நம்பி சூதாட்ட செயலியில் ரூபாய் 3 கோடி வரை இழந்ததாக ஒருவர் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் அமலாக்கத்துறை பிரபல நடிகர்களான பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்பட 29 பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்தது.
அந்த வழக்கின் அடிப்படையில் பிரபலங்களின் வங்கி பரிவர்த்தனைகள் டிஜிட்டல் பரிமாற்றங்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வந்தன. மேலும் சட்ட விரோத முறையில் சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் கொடுத்த நடிகர் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 பிரபலங்களை நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இதனை அடுத்து கடந்த ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் பிரகாஷ்ராஜ் நேரில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனை அடுத்து ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி இன்று நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு அனுப்பபட்ட நோட்டீஸ் அடிப்படையில் அவர் இன்று ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். பின்னர் ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
