கர்நாடக மாநிலம் பெங்களூரு வர்த்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட ராமகொண்டனஹள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூட கட்டிடத்தில் வடமாநிலத்திலிருந்து வந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இதில் பீகாரை சேர்ந்த ஹிதேந்திரா பாண்டே மற்றும் சீதாராம் பாண்டே ஆகிய இருவரும் பணியில் ஈடுபட்டனர்.
இவர்களில் சீதாராம் ஏற்கனவே பெங்களூருவில் இருந்துவர, தனது நண்பர் ஹிதேந்திராவை விஜயப்புரத்திலிருந்து அழைத்து வந்து தன்னுடன் வாடகை வீட்டில் தங்க வைத்து ஒரே இடத்தில் வேலைக்கு அழைத்துச் சென்றார்.
இந்தநிலையில் கடந்த ஜூலை 28-ந்தேதி இருவரும் வீட்டில் ஒருசேர மது அருந்திய போது, ஹிதேந்திரா தனது நண்பர் சீதாராமிடம் ‘விமலா’ எனப்படும் குட்கா பாக்கை கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சீதாராம் மறுத்ததால், இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த சீதாராம், வீட்டில் கிடந்த சுத்தியால் ஹிதேந்திராவை பலமுறை தாக்கியதால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், கொலை செய்த சீதாராம் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வர்த்தூர் போலீசார், கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், தப்பியோடிய சீதாராமை நேற்று குண்டப்பூரில் வைத்து கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், ‘விமலா’ பாக்கை கேட்டதால் கோபம் ஏற்பட்டே தாக்கியதாக ஒப்புக்கொண்டார். தற்போது கைதான சீதாராமிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அந்த பகுதி வடமாநிலத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
