மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்தவர் அமோல் சப்காலே. இவர் மிராபயந்தர்- வசாய்விரார் கமிஷனரேட் அலுவலகத்தில் போலீஸாக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று மின்சார ரயிலில் வசாய்விரார் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது போலீஸ் சீருடை அணிந்திருந்த அவர் மது அருந்திவிட்டு ரயிலில் மகளிர் பெட்டியில் ஏறி உள்ளார். இவர் மது அருந்தி இருந்ததை அறிந்த பெண்கள் அவரிடம் இருந்து தள்ளியே நின்றனர்.
ஆனால் அமோல் பெண் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை நடத்துவதாக கூறி சில பெண்களின் உடம்பில் கை வைத்து தகாத முறைகளில் நடந்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த சக பயணிகள் போலீஸ்காரரின் நடவடிக்கையை செல்போனில் வீடியோ எடுத்தனர்.
பின்பு இந்த சம்பவம் குறித்து அந்தப் பயணிகள் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். இந்த நிலையில் ரயில் வசாய் ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது அந்தப் பெண் பயணிகள் போலீஸ்காரரை பிடித்து ரயில்வே போலீசிடம் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து அமோல் சகாவே கைது செய்த ரயில்வே போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
