கர்நாடகா மாநிலம் தீர்த்தஹல்லி ஹல்யாபுரா என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் குண்டா நாயக்(72)- லட்சுமியம்மா(58). தம்பதியான இவர்கள் சொந்தமாக வீடு கட்டுவதற்காக தங்களுக்கு தெரிந்தவர்கள், தனியார் வங்கி போன்ற இடத்தில் ரூபாய் 5 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளனர். அதற்கு குண்டா நாயக் தவறாமல் வட்டி தொகையை செலுத்தி வந்துள்ளார்.

ஆனால் சில மாதங்களாக கடனுக்கு வட்டி கட்டாததால் கடன் கொடுத்தவர்கள் அவரது வீட்டை தேடி வந்து கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் குண்டா நாயக் மற்றும் அவரது மனைவி வீட்டில் இருந்தபோது இவர்களுக்கு கடன் கொடுத்த ஒரு நபர் வீட்டை தேடி வந்து கடன் தொகையை திரும்ப செலுத்துமாறு கேட்டு தம்பதியினரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த தம்பதியினர் அவர்களது கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் தம்பதியினர் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தம்பதியினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.