சமீப காலமாக மனைவிகள் தங்களது கணவன்மார்களைக் கொடூரமாகக் கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆக்ராவில் ஒரு மனைவி தனது கணவனைக் கொன்று, குளியலறையில் புதைத்துவிட்டு, அதன் மேலேயே டைல்ஸ் ஒட்டி 45 நாட்களாக அதே குளியலறையில் குளித்து வந்த சம்பவம் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், தற்போது உத்திரபிரேதேசம் மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் மற்றொரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஜூன் 26-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில், மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்த கணவனை அவரது மனைவி பிரீத்தி (எ) வினிதா உயிரோடு எரித்துக் கொன்றுள்ளார்.
16 ஆண்டுகளுக்கு முன்பு அவதேஷ் (எ) பவன் என்பவரைத் திருமணம் செய்த பிரீத்திக்குக் குழந்தைகள் இல்லை. கூலி வேலை செய்து வந்த அவதேஷ், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கணவனின் தினசரி டார்ச்சரால் வெறுத்துப்போன பிரீத்தி, சம்பவத்தன்று கணவன் போதையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது, படுக்கையில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துள்ளார். பின்னர், கணவன் பீடி குடித்ததால் தான் தீப்பிடித்துக் கொண்டதாகவும், அந்த நேரத்தில் தான் வங்கியில் இருந்ததாகவும் அக்கம்பக்கத்தினரிடமும் போலீசாரிடமும் பொய் சொல்லி நாடகமாடியுள்ளார்.
ஆனால், அக்கம்பக்கத்தினருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிரீத்தியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். மேலும், பக்கத்து வீட்டுக்காரரான விமலா என்ற பெண் கொடுத்த ஐடியாவின் பெயரில் தான் தான் இப்படிக் கொடூரமாக நடந்து கொண்டதாகவும் அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது போலீசார் இந்தப் பின்னணி குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
