பெண்களுக்கு இலவசமாக பயணிக்க தமிழக அரசு ‘விடியல் பயணம்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், சாதாரண கட்டண மாநகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சமீபத்தில், ஒரு பெண் தனது சமூக வலைதள பக்கத்தில், “மகளிர் பயண கட்டணம் இல்லை என்று போர்டு போட்டிருக்கும் பேருந்தில், ரூ.42 வீதம் ரூ.84-க்கு டிக்கெட் வாங்கி உள்ளார்கள். இது என்ன நியாயம்?” என கேள்வி எழுப்பினார். அவருடன் பகிரப்பட்ட டிக்கெட்டில், திருச்சியில் இருந்து முசிறிக்கு செல்லும் பயணத்துக்காக 2 பேருக்கான கட்டணமாக ரூ.84 வசூலிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் இணையத்தில் பரவ, பலரும் தமிழக அரசின் திட்டத்தையும், செயல்பாட்டையும் விமர்சிக்கத் தொடங்கினர்.
இந்த பரப்பைத் தொடர்ந்து, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கண்காணிப்பு மையம் வழியாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “விரிவாகப் பரவி வரும் புகைப்படத்தில் காணப்படும் பேருந்து ‘விடியல் பயண’ திட்டத்திற்குட்பட்டது அல்ல. இது திருச்சி–முசிறி இடையே இயக்கப்படும் பி.எஸ்.4 வகை புறநகர் பேருந்து (நீல நிறம்) ஆகும். இந்த வகை பேருந்துகளில் பயணிக்க கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும், மின்னணு பயணச்சீட்டில் பயணிகள் விபரங்களை பதிவு செய்யும் போது, நடத்துநர் தவறுதலாக ‘ஆண்’ என குறிப்பிடுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சேலம் புறநகர் பேருந்துகளுக்கான துணை மேலாளர் (வணிகம் கூட்டாண்மை) தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்” என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
